முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 6 புதிய ரேசன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்தனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது,
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார். தொடர்ந்து அரசியலில் புதிய எதிரிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் விரைவில் தி.மு.க. தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.