வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் 11.74 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் மறுவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 6 நியாய விலைக் கடைகளை முதல்வர் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேசன் பொருட்களையும் வழங்கினார்.
அதை தொடர்ந்து கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.4.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார். தொடர்ந்து வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஆர்.பி காலனி 8-வது தெருவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின் மாற்றி கட்டமைப்புகளை, பாதுகாப்பான வளைதள மின் மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, ஜவகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை எந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.