மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேகமலை பகுதியில் 98 கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப் பகுதி மேகமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் வருவதால், மலைப்பகுதி ஆக்கிரமிப்புக்களை வருகிற ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால், கோபமடைந்த நீதிபதிகள், மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், அவர்கள் கூறியதாவது; மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இலவம்பஞ்சு பயிரிடப்பட்டுள்ள அந்த நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட வேண்டும். இந்தத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக வருபவர்களே, மேகமலையில் குடிபுகுகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள கட்டடங்களை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேகமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும், என்று எச்சரித்துள்ளனர்.