திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திற்கு கர்நாடகா அரசு அனுப்பியது. அதில் திருத்தம் செய்ய கோரி திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது. இதன் பிறகு திட்ட அறிக்கையில் கர்நாடகா அரசு திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. தற்போது திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ளது. இதன் வாயிலாக மாநில அரசு மேகதாது குடிநீர் மற்றும் மின்சாரத் திட்டத்தை மிக விரைவாகச் செயல்படுத்த மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையே நேற்று (ஆகஸ்ட் 18) மாலை முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். செல்லுவராயசாமி மற்றும் உயர் அதிகாரிகள், வனத்துறை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த சூழலில் தான் விரிவான திட்ட அறிக்கை திருத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; நீர்வளத்துறை அமைச்சர் செல்லுவராயசாமி மற்றும் மாநில அரசு இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வனத்துறை அனுமதியைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடைமுறைகளை உடனடியாகத் தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே தமிழக அரசு எத்தகைய முடிவு எடுக்கும் என்று காவிரி கரையோர மக்கள், விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.