பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார்.
பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்றனர். அமைதிப் பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி. நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு. அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு. மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு, நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்து கொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் கெட் அவுட்-தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.