திண்டிவனத்தில் என் கனவு-என் எதிர்காலம் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் விழா என் கனவு- என் எதிர்காலம் இணையதள தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்கவிழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

திண்டிவனம் - செஞ்சி சாலையில் கொள்ளார் கிராமத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நலத் திட்ட பயன்களையும், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களையும் வழங்கி என் எனவு - என் எதிர்காலம் என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று காலை சாலை மார்க்கமாக புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் தி.மு.க சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பை தொடர்ந்து திண்டிவனம் தீர்த்த குளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தி திடல் வரை ரோடு ஷோ மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் பகுதியை சென்றடைகிறார். அரசு விழா முடிவடைந்த பின்னர் சாலை மார்க்கமாக மீண்டும் சென்னைக்கு முதல்வர் புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் வருகையையொட்டி விழா நடைபெறும் பகுதி, திண்டிவனம் பகுதிகள், முதல்வர் வரும் வழித்தட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.