நீட் தேர்வுக்கான தற்போதைய முறையில் எந்தவித குளறுபடியும் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, பிறகு மீண்டும் ஜூன் 21ம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்த சூழலில், நீட் தேர்வை கணினி வழித் முறைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீட் தேர்வுக்கான தற்போதைய முறையில் எந்தவித குளறுபடியும் செய்ய முடியாது என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். மேலும், வினாத்தாள் தயாரிப்பது குறித்து அவர் கூறியதாவது; உதாரணத்திற்கு இயற்பியல் தேர்வுக்கு 500 வினாத்தாள் அடங்கிய தொகுப்பில் இருந்து தலா 100 கேள்விகள் வீதம் 4 வினாத்தாள்கள் தயார் செய்யப்படும். அதில், இரு வினாத்தாள் தேர்வு முகமை இயக்குநரால் தேர்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வினாத்தாள்கள் முத்திரையிடப்பட்ட பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் அச்சுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது. டிஜிட்டல் குறியீடு மூலம் மட்டுமே அவை திறக்கப்படுகின்றன. மேலும், அச்சிட்ட பிறகு, அந்த வினாத்தாள் எந்தத் தேர்வு மையத்திற்கு செல்கிறது என்பது குறித்த எந்த தகவலும், அச்சிடும் நபர்களுக்கு தெரியாது. இந்தப் பணிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படும், இவ்வாறு தெரிவித்தார்.