பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று மலேசியா சென்றார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா செல்வதைத் தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பாரம்பரியத் துறைகளுக்கு அப்பாற்பட்டு உறவுகளை விரிவுபடுத்த இரு தரப்பினரும் விரும்புவதால், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இரு தரப்புக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையர் பி.என். ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் மற்றும் பிற வணிகப் பிரதிநிதிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள் உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 10-வது இந்தியா - மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகளின் மன்றம் நடைபெறவுள்ளது.
இந்த பயணத்தின் சிறப்பம்சமாக, இந்திய வம்சாவளி கலைஞர்கள் பங்கு பெரும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடி, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சி செய்கின்றனர். இந்த பெரிய சமூக நிகழ்வு சலாமத் டத்தாங் மோடி ஜி என்ற வரவேற்பு நிகழ்வில் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்திய வம்சாவளியினரின் ஒற்றுமை, கலாசார பெருமையை உலகிற்கு காட்டும் வகையில் அமையும். இந்த நிகழ்வு இந்தியா-மலேசிய உறவுகளை கலாசார ரீதியாக வலுப்படுத்தும்.இந்த சாதனை முயற்சி, சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா முழுவதிலுமிருந்து வரும் கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சிகளுடன், இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-மலேசியா உறவுகளில் வளர்ந்து வரும் நெருக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், இந்த சமூக நிகழ்வில் பிரதமர் மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் கூட்டாக உரையாற்ற உள்ளனர்.