ஜாம்ஷெட்பூர் எப்.சி., கால்பந்து அணியில் தனக்கிருந்த 100 சதவீத பங்குகளை, கோவாவை சேர்ந்த, 'சர்ச்சில் பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்'புக்கு வெறும் 100 ரூபாய்க்கு, 'டாடா ஸ்டீல்' நிறுவனம் விற்றுள்ளது.
'டாடா ஸ்டீல்' நிறுவனம், 'ஜாம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் 4.08 கோடி பங்குகளை வைத்திருந்தது. இந்த நிறுவனத்தின் கீழ் தான் ஜாம்ஷெட்பூர் எப்.சி., என்ற கால்பந்து அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணி 2017ல் இந்தியன் சூப்பர் லீக்கில் அறிமுகமானது. நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு வருவாய் 32.23 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், கடந்த மார்ச் நிலவரப்படி, அந்நிறுவனத்தின் மொத்த கடன்கள், அதன் சொத்துக்களின் மதிப்பை விட 5.8 கோடி ரூபாய் அதிகமாக இருந்தது. இதனால், 100 ரூபாய் என்ற அடையாளப்பூர்வ தொகைக்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் நிறுவனத்தின் பங்குகளை சர்ச்சில் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு மாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த பரிவர்த்தனைக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன. தேவையான அனுமதிகள் கிடைத்தால், வரும் 31ம் தேதிக்குள் ஒப்பந்தம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.