மும்பை: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தேசிய மாநாட்டில் பேசிய செர்ஜியோ கோர் பேசியதாவது: வெறும் 20 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலத்திலேயே அமெரிக்கா - இந்தியா தரப்பு வர்த்தகம் சாதனைகளைப் படைத்துள்ளது. பதிவாகி இருக்கும் சுமார் 12 மடங்கு வளர்ச்சி தற்செயலாக நிகழ்ந்ததல்ல. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எங்களின் அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்; பதவியேற்ற முதல் நாளிலிருந்தே இந்த உறவை வலுப்படுத்துவதில் அவர் பெரும் கவனம் செலுத்தி வருகிறார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மாற்றியமைத்ததுடன், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமி கண்டக்டர்ஸ், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் வகையில் முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகுத்தது என்றார்.