இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான நடைமுறைகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் சில முடிவுகளுக்கு சக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான புலனாய்வுத் தகவல்கள், தேசிய அளவில் பெரும் அரசியல் புயலை உருவாக்கியுள்ளன.
நாடு முழுவதும் சுமார் 13 கோடிப் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கைகள் அரசியல்ரீதியாக எதிர்க்கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் பகுதிகளில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா என்ற தீவிர விவாதங்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பத் தொடங்கி
யுள்ளனர். தேர்தல் முடிவு
களின் வெளிப்படை
த்தன்மை குறித்த சந்தேகங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் மற்றும் ஆணையத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்களும் கட்சிப் பிரமுகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்கு வங்கம்: உச்ச நீதிமன்றத்தின் நேரடித் தலையீட்டிற்குப் பிறகு, நீதித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்ட போதிலும், அங்கு சுமார் 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. பல தொகுதிகளில் இந்த நீக்கம் தேர்தல் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ்நாடு: தமிழ்நாட்டிலும் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், குறிப்பாக கொளத்தூர் போன்ற முக்கியத் தொகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் திருத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுப்பப்படுகின்றன. கள ஆய்வுகள் முழுமையாக நடைபெறாமல் மென்பொருள் மூலமாக இந்த நீக்கங்கள் நடந்ததா என்ற ஐயம் முன்வைக்கப்படுகிறது.
கேரளா & மகாராஷ்டிரா: மத்திய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்வாக்கு செலுத்தும் இடங்களில், வாக்காளர் சரிபார்ப்பு என்ற பெயரில் உண்மையான வாக்கா
ளர்களின் பெயர்கள் விடுபட்டுப்போயி
ருக்கலாம் என்ற வாதத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. ஸ்டாலின், பினராயி, மம்தா போன்ற வலுவான தலைவர்கள் திட்டமிட்டு தோற்க்கபடிக்கப்பட்டனரா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் பொதுவாகக் கூறும் விளக்கம் என்னவெனில், “இறந்தவர்கள், இருப்பிடங்களை மாற்றியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்களை மட்டுமே நீக்குகிறோம்.. இது தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கான வழக்கமான நடைமுறை” என்பதே ஆகும்.
ஆனால் SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி’ (Special Intensive Revision - SIR) நடவடிக்கைகளில் தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், தங்கள் ஆலோசனைகளை மீறி சட்டவிரோதமான நடைமுறைகள் புகுத்தப்படுவதாகவும் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரும், இரண்டு தேர்தல் ஆணையர்களும் இருப்பார்கள். சட்டப்படி மூவருமே சமமான அந்தஸ்து கொண்டவர்கள்.. தலைமைத் தேர்தல் ஆணையர் என்பவர் சமமான பவர் கொண்டவர்களில் முதன்மையானவர் மட்டுமே தவிர, தனிச்சையாக சர்வாதிகார முடிவுகளை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் இதை மீறி ஆளும் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வகையில் பல முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக எடுத்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளாரா என்பது குறித்து விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்கும் ஒரு சுதந்திரமான அமைப்பின் முடிவுகள் கேள்விக்குள்ளா
க்கப்படும்போது, அது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் என்ற கவலையும் பொதுவெளியில் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் வெளிப்படையான முழு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.