திருமங்கலம், செப். 25-
திருமங்கலம் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறையை சமாளிக்க அருகேயுள்ள கடைகளில் இட்லி வாங்கி வந்து மாணவர்களுக்கு வழங்கிய சம்பவத்தால் மக்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவு திட்டத்தை, தற்போதைய தமிழக அரசு விரிவாக்கம் செய்துள்ளது. இதன்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத்திட்டம், பள்ளியில் படிக்கும் 412 மாணவிகளுக்கு நேற்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், காலை உணவு விரிவாக்கத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வடை முதலியன வழங்கப்பட்டது. அப்போது திடீரென சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உணவு வழங்க முடியாமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அவர்கள் வரிசையில் பசியோடு உணவுக்காக காத்திருந்தனர்.