மருத்துவக் கழிவுகள் விவகாரம்: உடனடி நடவடிக்கை
சிவகங்கை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயபிரகாஷுக்கு பாராட்டு – அரசு மருத்துவமனைக்கு கடிதம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு கிடந்த மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, உயிரியல் மருத்துவக் கழிவுகளை (Bio-Medical Waste) பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லும் வாகனம் மூலம் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியதுடன், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுகளை முறையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
மேலும், மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மருத்துவக் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவக் கழிவு விவகாரத்தில் புகார் வெளியான உடனேயே களத்தில் இறங்கி ஆய்வு செய்து, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் மருத்துவக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படாத வகையில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.