இந்தியாவில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து 1991-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடையை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடை சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது.

இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடை சட்டம் தீர்ப்பாயம் உறுதி செய்து உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர்குமார் ஆகியோரடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க மத்தியஅரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.