டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசையும், பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வரும் 11-ம் தேதி அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும், பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் பிப்.11-ம் தேதி (புதன் கிழமை) காலை 10 மணியளவில் பேரணி நடைபெறும்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி, தலைமையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று கண்டனக் குரல் எழுப்பி, நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும். மேலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள இந்தப் பேரணியில், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் பல்வேறு இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.