வானம் பார்த்த பூமியில் 44ஆயிரம் மரக்கன்றுகள்!
ஒரே நர்சரியில் பசுமைப் புரட்சி – எல்.கொட்டாணிப்பட்டி ஊராட்சி செயலாளர் அர்ஜுனனின் சாதனை!
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி
வானம் பார்த்த பூமியாக விளங்கும் மதுரை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளில் பசுமையை அதிகரிக்கும் நோக்கில், டி.கல்லுப்பட்டி ஒன்றியம் எல்.கொட்டாணிப்பட்டி ஊராட்சியில் ஒரே நர்சரியில் சுமார் 44 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படியும், மதுரை மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநரின் ஆலோசனையின்படியும், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் முழு ஒத்துழைப்புடன் இந்தப் பசுமைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக எல்.கொட்டாணிப்பட்டி ஊராட்சி செயலாளர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
இந்த நர்சரியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கருங்காலி, வேம்பு, புங்கை, பூவரசு, வாகை, புளியமரம், நாவல், இலுப்பை, கொன்றை, அரசு, ஆலமரம், மகிழம், அத்தி, நெல்லி, சீமை இலுப்பை, மருதமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கிராமப்புறங்களில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கும், சாலையோரங்கள், பொது இடங்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலப்பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கும் தேவையான வகையில் இந்த நர்சரி செயல்பட்டு வருகிறது.
வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை உருவாக்கி, அவற்றை முறையாக பராமரித்து வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் முதலீடாக அமையும்.
“மரம் வளர்ப்போம்; மண்ணையும், மழையையும், மனிதர்களையும் காப்போம்” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்த முயற்சி, மற்ற ஊராட்சிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
அரசின் வழிகாட்டுதலுடன், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்போடு இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக ஊராட்சி செயலாளர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை சுமார் 10,000 மேற்பட்ட மரக்கன்றுகள் கூடுதலாக வளர்த்து வருவது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
காலையிலும் இரவிலும் தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்து சென்று பார்வையிட்டு வருவதோடு இங்கு இருக்கும் மரக்கன்றுகளை தமது பிள்ளைகளை போல கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் எல்.கொட்டாணிப்பட்டி ஊராட்சி செயலாளர் அர்ஜுனன்.
இயற்கையின் காதலராக மட்டுமல்லாமல் ஊரின் பசுமை பரப்பை மாற்றி காட்டியதில் முன்மாதிரியாக செயல்படும் அர்ஜுனன் போன்ற ஊராட்சி செயலாளர்களை ஆண்டுக்கு ஒரு முறையேனும் நடைபெறும் குடியரசு சுதந்திர தின விழாக்களில் விருது வழங்கி சிறப்பித்தால் அந்த இயற்கை அழகை இன்னும் அது எழில் கூட்டுவதாக அமைந்திருக்கும் என்று சொன்னால் மிகையாகாது