கீழ்நிலை ஊழியர்களிடம் கடுமையான அணுகுமுறை என புகார் — மத்திய மண்டலத்தில் குழப்பம் நீடிப்பதாக குற்றச்சாட்டு
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளில் சில உதவி பொறியாளர்களின் செயல்பாடுகளால் சுணக்கம் ஏற்படுவதாகவும், கீழ்நிலை ஊழியர்களிடம் தரக்குறைவான முறையில் பேசப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக மதுரையின் மையப்பகுதியை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் பணியாற்றி வரும் பெண் உதவி பொறியாளர் ஒருவரின் அணுகுமுறை குறித்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
அதிலும் அம்மனின் பெயரைக் கொண்ட தேவியான பெண் அதிகாரி எல்லாவற்றுக்கும் மேலாக பெருமாளின் பெயர் கொண்ட புரம் ஏரியாவை பார்க்கிறாராம். அவர் அங்கு நடந்து கொள்கின்ற விதம் அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பணியில் தனக்கு உள்ள அழுத்தத்தை எல்லாம் மொத்தமாக கீழ்நிலை அலுவலர்களிடம் காட்டுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முடிவை அவர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பணிச்சுமை மற்றும் மேலதிகாரிகளின் அழுத்தம் உள்ளிட்டவற்றை கீழ்நிலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் வெளிப்படுத்துவதாகவும், பல்வேறு விவகாரங்களில் உரிய ஆலோசனையின்றி அவசரமாக முடிவெடுப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன. இதனால் அலுவலகப் பணிகளில் ஒருங்கிணைப்பு பாதிக்கப்படுவதுடன், திட்டப் பணிகளிலும் சுணக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில், மாநகராட்சியின் முக்கியமான மண்டலங்களில் ஒன்றான மத்திய மண்டலத்தில் இதுபோன்ற நிர்வாக குழப்பங்கள் ஏற்படுவது திட்டப் பணிகளின் வேகத்தையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளையும் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
இதனிடையே, காலையில் கள ஆய்வு மேற்கொண்டு, மாலையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை கண்காணித்து வரும் மாநகராட்சி ஆணையரின் நிர்வாக முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில உதவி பொறியாளர்களின் செயல்பாடுகள் இருப்பதாகவும் மாநகராட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எனவே, திட்டப் பணிகளில் தொடர்ந்து சுணக்கம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ள உதவி பொறியாளர்களின் பணிச்செயல்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விரிவாக ஆய்வு செய்து, தேவையான இடங்களில் பணியிட மாற்றம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், கீழ்நிலை ஊழியர்களிடம் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்த புகார்களையும் விசாரித்து, மாநகராட்சியில் பணிச்சூழல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.