மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பத்திரப் பதிவாளர் கண்மணி மீது, பத்திரப் பதிவுகளுக்கு முறைகேடாக பணம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ள மனுவில், பத்திரப் பதிவுகளுக்கு நேர்மையாகவும் பதிவின்படியாகவும் லஞ்சம் பெறும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், பத்திரப் பதிவுகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், முறைகேடான பத்திரங்களுக்கு ரூ.1 லட்சம் வீதமும் தொகை பெறப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 22.07.2026 அன்று மாவட்ட பதிவாளர், மாவட்ட ஆட்சியர், பதிவுத்துறைத் தலைவர், பதிவுத்துறை துணைத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பத்திரப் பதிவாளர் கண்மணி அலுவலகத்திலேயே ஒரு நபரை வைத்து பணம் வசூல் செய்வதாகவும், லஞ்சம் கொடுக்க மறுக்கும் பொதுமக்களிடம் உரிய முறையில் பத்திரப் பதிவு செய்யாமல் அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லஞ்சம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால், தன்னை மிரட்டுவதாகவும், அதனால் புகார்தாரர் அச்சமடைந்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

27.07.2026 முதல் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, செல்லம்பட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவினை அளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முருகன் முன்னதாக கோரிக்கைகளை விளக்கி திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.