சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் வரும் 22ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அ னைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஆக்கப் பணிகள் குறித்து கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து 100ஆக உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு நீண்டநாளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முன்னுரிமை தர திட்டமிடப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலா 2 முதல் 4 தொகுதிகள் வரை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.