இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் ஃப்ளோரஸ் தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது திரும்பப் பெறப்பட்டது.

அந்த தீவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்தால் ஆறு பேர் தீவிர காயமடைந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.