சென்னை: தீபாவளிக்கு முன்னதாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கிளம்பாக்கம் ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் ஆகாய நடைபாதை பணிகள் மாநில அரசு தரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ரயில் நிலையத்தோடு இணைக்க வேண்டிய பணிகள் மீதம் இருக்கின்றன. பணிகளை முடித்து, நடப்பாண்டில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது தீபாவளிக்கு பிறகோ கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்க வாய்ப்புள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்துக்கு 2-வது ஏசி மின்சார ரயில் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் செந்தில்குமார் கூறும்போது, “சென்னை கோட்டம் கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5 ஆயிரத்து 38 கோடி வருவாய் எட்டியுள்ளது. 11.330 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முழுவதுமாக பொருத்தப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.720 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிக்கப்படும்” என்றார்.