சென்னை, செப்.29–

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.42 கோடி மதிப்பிலான பணிகளுக்கான ஆன்லைன் டெண்டரில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், குறைந்த தொகையை குறிப்பிட்ட நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, அதிக தொகையை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் சாய் அஜய் பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பி.கிருஷ்ணமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரும் பணிகளை 2026-ம் ஆண்டு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள ரூ.42 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 202 பணிகளாகப் பிரிக்கப்பட்டு, பாலாறு வடிநில வட்டத்தைச் சேர்ந்த கோட்டங்களில் ஆன்லைன் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அரசாணையின்படி அனைத்து டெண்டர்களும் ஒளிவு மறைவற்ற முறையில் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தங்களது நிறுவனத்துக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் டெண்டரில் பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும் என்ற நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பணிகளை மேற்கொள்ளும் வகையில் சில நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, 27.08.2026 மற்றும் 31.08.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற டெண்டர்களில் தங்களது நிறுவனம் சார்பில் ஆரணியாறு வடிநில கோட்டம், சென்னை; கொசஸ்தலையாறு வடிநில கோட்டம், திருவள்ளூர்; கீழ்பாலாறு வடிநில கோட்டம், காஞ்சிபுரம் ஆகிய மூன்று கோட்டங்களில் மொத்தம் 15 பணிகளுக்கு டெண்டர் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில பணிகளுக்கான டெண்டரில் தங்களது நிறுவனம் L1 என குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால் எந்தவிதமான காரணமும் குறிப்பிடாமல் அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, L2 ஆக இருந்த நிறுவனம், தங்களது நிறுவனம் குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான தொகையை குறிப்பிட்டிருந்தபோதிலும், அந்த நிறுவனத்தின் டெண்டர் ஏற்கப்பட்டு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களிடம் விளக்கம் கோரி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் இதேபோன்ற பணிகள் எந்த விதமான நிபந்தனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களின் டெண்டர் பதிவுகளை ஆய்வு செய்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கால அவகாசம் குறித்து கேள்வி

மேலும், நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் டெண்டர் நடைமுறைகள் தொடர்பாகவும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

17.08.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிட்ட கால டெண்டராக ஏழு நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஆன்லைன் டெண்டர் கோரப்பட்டதாகவும், இதனால் சில ஒப்பந்ததாரர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல், இந்த ஆண்டு இப்பணிகளுக்கான டெண்டரில் பல்வேறு நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சில ஒப்பந்ததாரர்கள் சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரூ.42 கோடி மதிப்பிலான மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள், L1 மற்றும் L2 நிறுவனங்களின் தேர்வு, டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்து, விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாய் அஜய் பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பி.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.