சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பா.ஜ.க. ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று முன்தினம் (பிப்.4) அமளியின்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவர் ஓம் பிர்லா இருக்கையை நோக்கி வீசியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம். பி. சு.வெங்கடேசன் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில், காங்கிரஸ் எம்.பி.க்களான குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமார் ரெட்டி, அமரீந்தர் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் ஆகியோர் மீதும் இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 2-ம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுதொடபாக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஏன் அஞ்சுகிறது?. அவையின் உறுப்பினர்களுக்கு பதிலளிக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான கேள்விகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கும் வகையில் மீதான இடைநீக்க நடவடிக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.