விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் என் கனவு என் எதிர்காலம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 2025, ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் நலத் திட்டங்கள், பயன்கள் வழங்கும் விழா, 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழா, என் கனவு என் எதிர்காலம் இணையதளத் தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலையில் கொள்ளாறிலுள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, நலத் திட்டப் பயன்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களையும் வழங்கி, என் கனவு என் எதிர்காலம் என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக திண்டிவனத்தில் அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னையிலிருந்து நேற்று காலை புறப்பட்டு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து திண்டிவனம் தீர்த்தகுளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தியார் திடல் வரை சாலை வழியாக பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் பகுதியை வந்தடைத்தார். அரசு விழா முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக மீண்டும் சென்னைக்கு முதல்வர் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் வருகையொட்டி விழா நடைபெறும் பகுதி, திண்டிவனம் பகுதிகள், முதல்வர் வரும் வழித்தடப் பகுதிகளில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.