சென்னையில் நேற்று அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்பாகவும், அ.தி.மு.க. குறித்தும், விஜய்யின் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் தெரிவித்ததாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. விஜய் பொதுவெளியில் வந்து பார்த்தால்தான் தெரியும். ஒரு சம்பவத்துக்குப் பிறகு வெளியவே வராமல், நாட்டில் என்ன நடக்கிறது என தெரியவில்லை, எந்தக் கட்சி யாருடன் கூட்டணி எனத் தெரியவில்லை. கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார் என்றும் தெரியவில்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட முதல் பேட்டியிலேயே அ.தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எனத் தெரிவித்தார். இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், விஜய் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை போலும். அவருக்கு பார்ப்பதற்கு நேரம் இல்லை. மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை. அவர் பேசுவதை வைத்து கேள்வி கேட்க வேண்டாம். ஒருமுறையாவது அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும்.
எங்களை எப்படி ஊழல் கட்சி என்று கூற முடியும்? ஜெயலலிதாவையும், எம்.ஜி.ஆரையும் முன்னுதாரணமாக கூறியுள்ளார். எனது ஆட்சியில் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை நீதிமன்றம் வரை சென்று குற்றமற்றவர் என்று நிரூபித்துள்ளேன். எங்கள் கட்சியில் இருந்து சென்றவர் (செங்கோட்டையன்) ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று வந்தவர். அவரைதான் விஜய் கட்சியில் சேர்த்துள்ளார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.