கரீபியன் கடல், வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது அமெரிக்கா. இந்தக் கப்பல்களில் வெனிசுலாவின் தடை செய்யப்பட்ட எண்ணெய் கொண்டு வரப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இரண்டு கப்பல்களில் மரினேரா என்கிற எண்ணெய் டேங்கர் கப்பலால் தான் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது.

இந்தக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய போது, மரினேரா கப்பலில் ரஷ்ய கொடி பறந்து கொண்டிருந்தது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல்போக்கை உண்டாக்கி உள்ளது. இதையறிந்த ரஷ்யா தங்களது கப்பல் படையால் அந்தக் கப்பலை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. இந்தப் பாதுகாப்பையும் மீறி அமெரிக்கா மரினேராவைக் கைப்பற்றியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளைப் பிரிவு, உலகம் எங்குமே வெனிசுலாவின் எண்ணெய்க்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதனால், அமெரிக்காவின் தடையை மீறிய இந்தக் கப்பல் ட்ரம்ப் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை, அந்தக் கப்பலில் இருந்த அனைத்து ரஷ்ய குடிமகன்களும் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பலை இன்னொரு நாடு கைப்பற்றுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று பதிவு செய்துள்ளது.