மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு(92) தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமர்த்தியா சென்னின் வாக்காளர் விவரங்களில் வயது உள்ளிட்டவற்றில் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வரும் 16-ம் தேதி பீர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமர்த்தியா சென் போன்ற புகழ் பெற்ற ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று சாடியுள்ளது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.