ரேசன் கடையில் அரிசி மூட்டை மாயம்!
கலெக்டர் திடீர் ஆய்வு – விற்பனையாளர் சஸ்பெண்ட்; குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுப் போலீசார் விசாரணை
ராமநாதபுரம், செப்.24
ராமநாதபுரம் அருகே காரிகூட்டம் பகுதியில் உள்ள ரேசன் கடை பதிவேட்டின்படி இருப்பில் இருக்க வேண்டிய அரிசி அளவைவிட குறைவாக இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்தக் கடையின் விற்பனையாளர் சத்திய கவிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே காரிகூட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று அந்த ரேஷன் கடைக்கு மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் இருந்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை அவர் சரிபார்த்தார்.
அப்போது, ஆவணங்களின்படி கடையில் இருப்பில் இருக்க வேண்டிய அரிசி மூட்டைகளில் ஒரு மூட்டை மாயமாகியிருப்பதுதெரியவந்தது. இதையடுத்து ரேஷன் கடை விற்பனையாளர் சத்திய கவிதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், கடையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அரிசி எங்கு கொண்டு செல்லப்பட்டது? அதை எடுத்துச் சென்றது யார்? அரிசி கடத்தப்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பல்வேறு துறைகள் மூலம் விசாரணை
இந்த விவகாரத்தில் கூட்டுறவுத்துறைசார்பில் ரேஷன் கடையின் இருப்புப் பதிவேடு, விற்பனைப் பதிவுகள், பொருட்களின் வரவு–செலவு மற்றும் கடையின் அன்றைய உண்மையான இருப்பு ஆகியவை சரிபார்க்கப்பட வேண்டும்.
அதேபோல், வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மூலம் ரேஷன் அரிசி ஒதுக்கீடு, கடைக்கு அனுப்பப்பட்ட அரிசியின் அளவு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட அளவு மற்றும் மீதமுள்ள இருப்பு ஆகியவை கணக்குகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேலும், அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி முறைகேடாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டதா, கடத்தல் நடைபெற்றதா என்பது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்புக்கும், நேரடியாக ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்ட இருப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள வேறுபாடு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அரிசி மூட்டை மாயமான சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முறைகேடு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.