மதுரை, அக்.1-

மதுரை தல்லாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக்கூறி, 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கல்லூரி நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொகுப்பூதிய ஆசிரியர் பிரபாகரன் கூறியதாவது:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் தற்போது முனைவர் பி.ஜார்ஜ் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே முதல்வராக இருந்தபோது நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர் புவனேஸ்வரன் முதல்வராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு முதல் மீண்டும் பி.ஜார்ஜ் பொறுப்பு முதல்வராக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அவரது குற்றச்சாட்டின்படி, கல்லூரி நிர்வாகத்தின் தவறான அறிக்கையால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அலுவலகத்தில் சுமார் ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக செலுத்தப்பட்டதாகவும், இதனால் மாணவர்களின் பணம் வீணடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2026-27-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை மாணவர்களிடமிருந்தும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கல்விக் கட்டணத்தில் பெரும்பகுதியை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சுமார் ரூ.8 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரியில் நிதி இல்லை என நிர்வாகம் தெரிவிப்பதாகவும் ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், கல்லூரியில் ஆண்டுக்கு சுமார் ரூ.14 கோடி வரை மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும், மாதந்தோறும் சுமார் ரூ.92 லட்சம் வரை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக செலவிடப்படுவதாகவும் ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த முழுமையான கணக்குகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்கள் முன்வைக்க நிர்வாகம் தூண்டுவதாகவும் ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் பெறப்பட வேண்டியுள்ளது.

இதனிடையே, கடந்த 25-ம் தேதி அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதாக ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

எனவே உரிய விசாரணை நடத்தி, நிதி தொடர்பான முழுமையான கணக்குகளை வெளியிட வேண்டும் என்றும், கல்லூரியின் வரவு-செலவு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கல்லூரி நிர்வாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.


ஏற்கனவே பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் நிதி நெருக்கடியை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாணவர்களின் கல்வி கட்டணத்தை மட்டும் மூலதனமாக வைத்து தொடர்ந்து கல்லூரியை செயல்படுத்துவது என்பது நிர்வாக குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.