மதுரை, அக்.2-
‘மூன்று மாவட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு ஆலைக்கு, கரும்பு வரத்து குறைவு என்று சொல்வதா’ என மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் கூட்டம் நடந்தது. வேளாண், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்கள் ராணி, சாந்தி, பிரபா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பழனிசாமி, கொட்டாம்பட்டி: மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட கரும்பு விவசாயிகளை கணக்கில் சேர்க்காமல் சாகுபடி பரப்பு குறைவு என்று சொல்லி அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு ஆலையை திறக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். ஆலைக்குரிய மதுரை சாகுபடி கரும்புகளை தனியார் ஆலைக்கு மாற்றுவதால் போராட்டம் நடத்த உள்ளோம். ஆளுங்கட்சியினர் சம்பாதிப்பதற்காக 60 கல்குவாரிகளை குறைந்த தொகைக்கு ஏலம் விட்டு அரசுக்கு ரூ.கோடிக்க
ணக்கில் இழப்பை ஏற்படுத்தி
யுள்ள கனிமவளத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், உசில
ம்பட்டி: கால்நடைகளுக்கு அரசின் தாது உப்புக்கலவை வழங்காததால் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தாமதமாகிறது. கால்நடை பல்கலையின் தாது உப்புக்கலவையை விலைக்கு வாங்கித் தர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.
செல்லம், உசிலம்பட்டி: மார்க்கெட் சேறும் சகதியுமாக உள்ளது. தேனி ரோடு முதல் எம்.எல்.ஏ., அலுவலகம் ரோடு வரை 40 அடி ரோட்டை, வியாபாரிகள் ஆக்கிரமித்து எட்டடியாக சுருக்கியுள்ளனர். நகராட்சி கமிஷனர் எந்த கூட்ட
த்திற்கும் வருவதில்லை, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
குணசேகரன், கார்சேரி: கண்மாயை துார்வார நுாறு நாள் வேலைத் திட்ட ஆட்களைப் பயன்படுத்த வேண்டும். என்னிடம் 5000 பனை விதைகள், நாற்றுகள் உள்ளன. இலவசமாக தரவிரும்புகிறேன். இவற்றை உரியமுறையில் நடுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்லம், மதுரை கிழக்கு: கட்டட வேலை உட்பட பிற வேலைக்கு சென்று, நுாறு நாள் வேலைக்கு வராதவர்களுக்கு வங்கிக்கணக்கில் சம்பளம் ஏறுகிறது. மற்றவர்கள் வேலை செய்ய தயாராக இருந்தாலும் வேலை மறுக்கப்படுகிறது. முறைகேடாக செல்லும் தொகையை கண்காணிக்க வேண்டும்.
மலைச்சாமி, மாங்குளம்: குறைந்த மகசூலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்சூரன்ஸ் இழப்பீடு கேட்டு ஓராண்டாகியும் வழங்கவில்லை. எப்போது கிடைக்கும் என்று கலெக்டர் உறுதிகூற வேண்டும்.
மாரிச்சாமி, மாடக்குளம்: மாடக்குளம் கால்வாய் சீரமைப்பிற்காக ரூ.17 கோடி நிதியில் கான்கிரீட் கால்வாய் கட்டப்பட்டது. ஏற்குடி அச்சம்பத்து பகுதி, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் கான்கிரீட் சுவரில் துளையிட்டு கால்வாய்க்குள் கழிவுநீரை விடுகிறது பி.டி.ஓ., அலுவலகம். மீண்டும் துளையை அடைத்து கழிவுநீரை விடாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.
கலெக்டர்: மதுரையில் 24 பேருக்கும் மற்ற மாவட்டங்களில் இதை விட பலமடங்கு எண்ணிக்கையில் பயிர்க் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இணையதளத்தில் சரிசெய்வது மத்திய அரசின் கையில் உள்ளதால் தாமதமாகிறது. நுாறுநாள் வேலைத் திட்டத்திற்கு வராமல் சம்பளம் பெறுபவர்கள் குறித்து விசாரிக்கப்படும். மாடக்குளம் கால்வாய் கான்கிரீட் சுவரை உடைத்ததை பி.டி.ஓ., மீண்டும் சரிசெய்ததை உறுதிசெய்ய வேண்டும். உசிலம்பட்டி நகராட்சி கமிஷனரிடம் பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.