கொட்டாம்பட்டி, அக்.2-
சிப்காட் தொழிற்சாலைக்கு ரோடு அமைக்க நிலஉரிமையாளர்களுக்கு தெரிவிக்காமல் பட்டா நிலங்களில் சர்வே செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், கருத்து கேட்பு கூட்டம் நடத்த வலியுறுத்தியும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலுார் தாலுகாவில் பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வஞ்சிநகரம் உள்பட பல கிராம பகுதியில் தமிழக அரசு சார்பில் 278 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு ரோடு அமைக்க தற்போது 100 அடி அகலத்தில் பட்டா நிலங்களில் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மூவன்சிவன்பட்டியில் பட்ட சாமி கோயில் அருகே பந்தல் அமைத்து பொங்கல் வைத்து வழிபட 18 கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார் பந்தலை அகற்றியதோடு, அனுமதி மறுத்தனர்.
இதில் ஆத்திரமடைந்தவர்கள் சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி கோஷம் எழுப்பினர். தாசில்தார் வசந்த், டி.எஸ்.பி., சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இத் திட்டத்தால் விவசாய, மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதிக்கப்படும். எனவே கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.
விரைவில் கூட்டம் நடத்துவதாக தாசில்தார் தெரிவித்ததால், மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதில் டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.