மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூபாய் 84 கோடியில் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் என முதல்வர் விஜய் சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதும் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர், வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான “பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை” அமைக்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும். திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

மேலும், ஐந்து மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும். முதற்கட்டமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூபாய் 84 கோடியில் 8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.