மதுரை அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்றிருந்த நிலையில், விழாவின் போது மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செந்தில் பாலாஜி தனது சமூக வலைதளப் பதிவில், “மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் இருக்கிறார். ஆனால் மின்சாரம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வெளியான விளக்கங்களிலும் முரண்பாடு இருப்பதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விழா ஜெனரேட்டர் மூலம் நடைபெற்றதாகவும், ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறே பிரச்னைக்கு காரணம் என அமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், மின்வாரியத்தின் தரப்பில் மின்தடை ஏற்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் கூறிய ஜெனரேட்டர் கோளாறு குறித்த விளக்கம் என்ன?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, மின்வாரியம் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவு பின்னர் நீக்கப்பட்டதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

மின் துறை அமைச்சர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவிலேயே மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மின்வெட்டுக்கான காரணம் தொடர்பாக மாறுபட்ட விளக்கங்கள் வெளியாகியிருப்பது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.