திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளையில் அறநிலையத்துறை இடையீட்டு மனு தாக்கல்

மதுரை: திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே, திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் கோரி ஏற்கனவே வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மொத்த மலையையும் அளவீடு செய்ய வேண்டும். மனுதாரர் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி, அறநிலையத் துறை கமிஷனர், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். மலையை அளவீடு செய்ய பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப் பெற்று ரத்து செய்ய வேண்டும். கள ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். கள ஆய்வு நடத்த உத்தரவிடுவதற்கு முன், இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரையும், குறிப்பாக எங்களையும் விசாரித்து கருத்துகளை பெறுமாறு ஒன்றிய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், அறநிலைத்துறை தரப்பில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு, ஒன்றிய தொல்லியல் துறை மற்றும் மனுதாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 2வது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.