மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார்.
தாய்–சேய் நலனை வலியுறுத்தும் விழாகர்ப்பிணிப் பெண்களின் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதுடன், கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டு, தாய்மார்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்கும் வகையில் சீர்வரிசைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், கர்ப்ப காலத்தில் சத்தான உணவு உட்கொள்வது, முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது, இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்தல், தாய்–சேய் நலன் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமூக அளவில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.