மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் தமிழ்நாடு பாண்டியனில் இன்று (25.09.2026) தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN), மதுரை திருநங்கையர் மற்றும் திருநம்பிகள் ஆவண மையம் (TRC) ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான ‘திருநர் தொழில்முனைவோர் மாநாடு – 2026’ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா அவர்கள் பங்கேற்று, தொழில் முனைவோர்களின் தயாரிப்புகள் மற்றும் தொழில் முயற்சிகளை பார்வையிட்டு கலந்துரையாடினார்.



இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில் முயற்சிகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.


இந்நிகழ்வில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்துப் பார்வையிட்டதுடன், திருநர் தொழில்முனைவோருடன் கலந்துரையாடிச் சிறப்புரையாற்றினார்.



விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது:-:



" ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. பிறப்பால் அனைவரும் சமம். ஆனால் ஒருவரின் சிறப்பு அவர் செய்யும் தொழிலில் வெளிப்படுகிறது. இன்று நாம் கொண்டாடுவது அந்தத் தொழிலையும், அதை முன்னெடுக்கும் திருநர் தொழில்முனைவோர்களையும் தான்.


திருநர் சமூகத்தினருக்காகப் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி. 2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் உன்னத இலக்கை அடைய அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது.


இம்மாநாட்டின் நோக்கமானது Empower (அதிகாரமளித்தல்), Connect (இணைத்தல்), Collaborate (ஒருங்கிணைத்தல்), Elevate (உயர்த்துதல்) ஆகிய நான்கு தூண்களைக் கொண்டது. PMFME (பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டம் - Pradhan Mantri Formalisation of Micro food processing Enterprises Scheme) கடன் உதவி, இயந்திர உதவி மற்றும் StartupTN-ன் மூன்றாம் பாலினத்தவர் புத்தொழில் திட்டம் போன்ற தமிழக அரசின் சிறப்பான திட்டங்களைப் பயன்படுத்தி மேலும் பல திருநர் தொழில்முனைவோர் உருவாக வேண்டும்.


சமூகத் தடைகளைத் தாண்டி இன்று தொழில்முனைவோர்களாக உயர்ந்து நிற்கும் உங்கள் அடையாளத்தை உங்கள் பலமாகவும், உங்கள் தொழிலை உங்கள் முகவரியாகவும் மாற்றிக் கொள்ளுங்கள். தொழில் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இவர்களுக்குத் துணைநிற்க வேண்டும். தமிழ்நாடு அரசு உங்கள் தொழில்முனைவுப் பயணத்தில் எப்போதும் துணைநிற்கும்." என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


டிரான்ஸ் தொழில்முனைவோர் கண்காட்சி (Trans Entrepreneurs Expo): தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 திருநங்கைத் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகள், சேவைகள் மற்றும் புதுமை முயற்சிகளை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த்து.



இந்தியாவில் முதன்முறையாக, திருநர் தொழில்முனைவோர் ஒருங்கிணைந்து செயல்படவும், தொழில் நெட்வொர்க்கிங் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளை அணுகவும் இம்மாநாட்டில் பிரத்யேகக் கூட்டுத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.



மதுரையில் தேர்வு செய்யப்பட்ட திருநங்கைப் பெண்கள் தொழில்முனைவோருக்கு PMFME திட்டத்தின் கீழ் கடன் ஆதரவும், பானங்கள் தயாரிக்கும் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.


திருநர் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு மற்றும் சந்தை இணைப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில், முன்னணி தொழில் வளர்ப்பு மையங்களான TSOM Incubation Association மற்றும் Solamalai Foundation for Startup Incubation ஆகியவற்றுடன் ஆவண மையம் (TRC) புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


மாநாட்டின் நிறைவில், சிறந்த பங்களிப்பை வழங்கிய திருநர் தொழில்முனைவோருக்குப் பாராட்டும் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.



இந்த மாநாட்டில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.கணேசன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் அலுவலர்கள் திருமதி.ஸ்ரீதேவி, திரு.சக்திவேல், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆவண மையத்தின் நிர்வாக இயக்குநர் திருநங்கை பிரியா பாபு, அரசு அலுவலர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை வல்லுநர்கள், தொழில் வளர்ப்பு மையப் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.