மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்து, அவரை கடுமையாக விமர்சித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே” எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மதுராந்தகம் பிரசாரத்தில் விஜயின் பேச்சு மற்றும் கருத்துகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, “த.வெ.க. தூய சக்தி; தி.மு.க. தீய சக்தி” என்று எவ்வாறு பேச முடிகிறது என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மரகதம் குமரவேல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து த.வெ.க.வில் இணைந்து போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், “வாக்களித்த மை விரலில் இருந்து அழியும் முன்பே கூட்டணி எம்.எல்.ஏ.க்களை தூக்குவதுதான் தூய சக்தியா?” என்றும், த.வெ.க. வேட்பாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு குறித்து விஜய் கவனிக்க வேண்டும் என்றும் தனது பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்று விஜய் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், சட்டப்பேரவையில் பா.ஜ.க. என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். த.வெ.க. தொடங்கிய காலம் முதல் பா.ஜ.க.வை எதிர்த்து விஜய் எத்தனை முறை பேசியுள்ளார், எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் விஜயை விமர்சித்துள்ள ஸ்டாலின், “நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு “கஜானா காலி” எனக் கூறுவதாக சாடியுள்ளார்.

மேலும், த.வெ.க. ஆட்சியின் திட்டங்கள் எனக் கூறப்படுபவை தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியே என்றும், த.வெ.க. அரசு புதிதாக கொண்டு வந்ததாகக் கூறப்படும் திட்டங்களை கிண்டலாகப் பட்டியலிட்டுள்ளார்.

“வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டுத் திட்டம், வெற்றி விலைவாசி உயர்வுத் திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாட்டுத் திட்டம்” எனத் தொடர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பெண்கள் குறித்து தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுவதாக விஜய் கூறியிருப்பதையும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். த.வெ.க. ஆதரவாளர்கள் மற்றும் சமூக வலைதளப் பேச்சாளர்களின் முந்தைய கருத்துகளையும் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக விஜய் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்துள்ள ஸ்டாலின், “உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா?” எனக் கேலி செய்துள்ளார். இந்த வழக்கை அரசியலாக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதாகவும், அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை விஜய் கவனிக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்ததாக அன்றைய செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அந்த சம்பவத்தைப் பொருத்தவரை எந்தத் தலைவரும் தனது தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்பமாட்டார் என்றே தான் கூறியதாக தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட தானோ, தி.மு.க.வோ முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 25-ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அதனைத் தொடர்ந்து ஸ்டாலினின் இந்தக் கடுமையான விமர்சனம் வெளியாகியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.