நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 2047க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை இந்தியா கொண்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்கும், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை உற்பத்தி 5 மடங்கும், மின்னணு சாதன உற்பத்தி 7 மடங்கும் அதிகரித்துள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனை 100 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன. சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன.

கடந்த 12 ஆண்டுகளில் எண்ணற்ற குடிமக்கள் தங்களின் அசைக்க முடியாத உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் பாடுபட்டுள்ளனர். நிர்வாகத்திலும் நாடு மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான விதிமுறைகள், நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. காலாவதியான நூற்றுக்கணக்கான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் வலைப்பின்னல்களை விரிவுபடுத்தினோம். பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தினோம். இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேகம் மற்றும் அளவு ஆகியவை சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக காணப்பட்ட ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்தவை.

இந்தியா ஒரு நிலையான அரசியல் ஆணையை; நிலையான அரசாங்கத்தை; துடிப்பான ஜனநாயகத்தை; வலுவான நீதித்துறையை; நம் அனைவரையும் வழிநடத்தும் அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. நாங்கள் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.