ஆம்ஸ்டல்வீன்: எப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொள்கின்றன. 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. ஆடவருக்கான போட்டியில் ‘டி’ பிரிவில் உள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று (15-ம் தேதி) வேல்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து 17-ம் தேதி இங்கிலாந்துடனும், 19-ம் தேதி பாகிஸ்தானுடனும் இந்திய அணி விளையாடுகிறது.

மகளிருக்கான போட்டியில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (16-ம் தேதி) சீனாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 18-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 20-ம் தேதி இங்கிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்ச நடத்துகிறது. அரை இறுதி ஆட்டங்கள் 27-ம் தேதி நடைபெறுகின்றன. தொடர்ந்து சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது. ஆடவர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் 28-ம் தேதியும், இறுதிப் போட்டி 30-ம் தேதியும் நடைபெறுகின்றன.