ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தோல்வியடைந்தது.

அதேபோல், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ்.01 என்ற முதன்மை செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் கடந்தமாதம் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது, ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடையாமல் திட்டம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வியை தழுவின.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ஒவ்வொரு பயணத்திலும் என்ன தவறு நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்ய தனித்தனி உள் மற்றும் வெளிப்புற தோல்வி மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோல்வி குறித்து குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, எல்லாவற்றையும் சரிசெய்து, நம்மை நாமே சான்றளித்த பிறகு, மிகவும் லட்சிய இலக்காகக் கொண்டு சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும். கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.