திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான 10-ந் தேதி பகல் 3 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது உள்ள கண்ணப்பர் கோவில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் மகாசிவராத்திரி விழா தொடங்குகிறது.
11-ந் தேதி சிறப்பு வழிபாடு, அம்பாரிகளில் காலை, மாலையில் சாமி, அம்மையார்கள் ஊர்வலம் மற்றும் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடைபெறும். அதை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை நடைபெறும். மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில் மறுநாள் 23-ந் தேதி கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெறும்.