மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இந்த புத்தகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது நரவணேவின் புத்தகம். அவர் இந்த புத்தகத்தில் லடாக் பற்றிய முழு விவரங்களையும் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. முக்கிய விஷயம் என்னவென்றால், பிரதமர் சொன்னதுதான். எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்.
(முன்னாள்) ராணுவ தளபதி ஜெனரல் நரவணே, ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீன டாங்கிகள் கைலாஷ் ரிட்ஜூக்கு வந்து விட்டன, அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் கேட்டார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மீண்டும் ராஜ்நாத் சிங்கை அழைத்தார். ராஜ்நாத் சிங், தான் உயர்மட்டத்திடம் கேட்பதாக கூறினார்.
உயர்மட்டத்தின் நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் உள்ளே வந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது சுடக்கூடாது என்பதுதான். நரவணேவும் நமது ராணுவமும் அந்த டாங்கிகள் மீது சுட விரும்பின, ஏனென்றால் அவை நமது எல்லைக்குள் நுழைந்து விட்டன. நரேந்திர மோடி எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள் என்று ஒரு செய்தியை அனுப்பினார். இதன் பொருள், நரேந்திர மோடி தனது கடமைகளை செய்யவில்லை.
இது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்று கூறி, ராணுவ தளபதியை அவர் விரும்பியதை செய்யச் சொன்னார். நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், முழு அரசமைப்பாலும் நான் கைவிடப்பட்டேன் என்று நரவணே எழுதுகிறார். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.