சேலத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தீவிரப் பிரச்சாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அன்று கரூரில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். அதன்பிறகு விஜய் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் திறந்தவெளி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று விஜய் பேசினார்.
தற்போது சேலத்தில் வருகின்ற 13-ம் தேதி விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி மாநகரக் காவல் ஆணையரை சந்தித்து சேலம் மத்திய மாவட்ட த.வெ.க. செயலாளர் தமிழன் பார்த்திபன் மனு அளித்துள்ளார். இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்தும், நிபந்தனைகள் குறித்தும் விரைவில் காவல் ஆணையர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.