புதுச்சேரி அரசின் செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் கடந்த 21-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் தொடங்கினர். புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும் அவர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி 1-ம் தேதி புதுச்சேரியின் காலாப்பட்டு தொகுதியில் காங்கிரசாரின் நடைபயணம் நிறைவடைகிறது.

அதைத் தொடர்ந்து காரைக்கால் பிராந்தியத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், பொறுப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் நடைபயணத்தை நிறைவு செய்யும் வகையில் பிப்ரவரி முதல் வார இறுதியில் ராகுல்காந்தி எம்.பி. புதுச்சேரி வரவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அப்போது புதுச்சேரிக்கான தேர்தல் கூட்டணியை ராகுல்காந்தி இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றன. இது குறித்து மாநில தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.