கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிந்து கேரள தேவசம்போர்ட்டின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீ வருவும் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்க தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்றனர். அவரிடம் தங்கம் கொள்ளை வழக்கில் தேவசம்போர்டின் முன்னாள் தலைவர் உன்னிகிருஷ்ணனுடனான தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. புனரமைக்க கொண்டு செல்லப்பட்டிருந்த துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் தங்கத்தகடு உள்ளிட்டவைகள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின.
ஆகவே அவரும் தங்க கொள்ளை வழக்கு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மேலும் அவரை இந்த வழக்கில் சாட்சியாக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமுலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.