விமான விபத்தில் பலியான பைலட் சுமித் கபூர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் அந்த விமானத்தை இயக்க வேண்டியது வேறு ஒரு பைலட். ஆனால் அவர் டிராபிக்கில் சிக்கியதால் தான் சுமித் கபூர் விமானத்தை இயக்கி பலியானதாக உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

மகராஷ்டிராவின் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இந்நிலையில் தான் மகராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக மும்பையில் இருந்து அஜித் பவார் பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டார். பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது.

இந்நிலையில்தான் விமான விபத்தில் பலியான பைலட் சுமித் கபூர் குறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி அவரது நண்பர்கள் கூறியதாவது, விபத்தில் சிக்கிய விமானத்தில் கேப்டனாக சுமித் கபூர் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் ஹாங்காங்கில் இருந்து ஊருக்கு வந்தார். ஓய்வில் இருந்தவருக்கு தான் விமானத்தை இயக்கும்படி அழைப்பு வந்தது. உண்மையில் அந்த விமானத்தை சுமித் கபூர் இயக்க வேண்டியது கிடையாது. மற்றொரு பைலட் தான் இயக்க வேண்டும்.

ஆனால் டிராபிக்கில் அந்த பைலட் சிக்கியதால் சரியான நேரத்துக்கு அவரால் வர முடியவில்லை. இதனால் அந்த பைலட்டுக்கு பதில் சுமித் கபூர் விமானத்தை இயக்கினார். தேர்தல் பிரசாரத்திற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு அஜித் பவாரை அழைத்துச் செல்லும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. சுமித் கபூருக்கு நீண்ட காலம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த விபத்து குறித்து முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கண்கலங்க கூறியுள்ளனர்.