சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
இந்திய அரசியலில் தனித்துவமான மாடல் திராவிட மாடல். தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருப்பீர்கள். தமிழகத்தில் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்கள் கூட வளர்ந்துள்ளன. திறமையான ஆட்சி நடத்துவதால்தான் இந்தியாவில் யாரும் அடைய முடியாத 11.19 சதவீதம் வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது. தி.மு.க. சொன்னால் சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்தனர். தி.மு.க. ஆட்ச கொண்டு வந்துள்ள திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்கள் எங்கள் திட்டங்களை பின்பற்றுவதுதான். மேலும் மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். எதிர்க்கட்சிகளால் முடியாது என்று சொல்லப்பட்ட திட்டங்களை கூட நிறைவேற்றி உள்ளோம். தமிழகமும், கட்சிகளும் தேர்தல் களத்திற்கு மும்முரமாகி வருகின்றன. தமிழகத்தில் ஊரக பகுதிகள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் நம்பிக்கையை பெற்றால்தான் வெற்றி பெற முடியும்.
வாரிசு அரசியல் என்பது எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் சொல்லும் இத்துப்போன குற்றச்சாட்டு. இதுவரை எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா உங்களிடம்? கற்பனை குற்றச்சாட்டுகளை கூறி எங்கள் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பா.ஜ.க.வுடன் இருப்பவர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள்தான். பா.ஜ.க.வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் நான் பதிலளித்து விட்டேன். எனது கேள்விகளுக்கு எப்போது பதிலளிப்பீர்கள். எங்களின் எந்த கேள்விக்கும் பா.ஜ.க.விடம் இருந்து பதில் வராது. தமிழகத்திற்கு பா.ஜ.க. செய்த துரோகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி என்ற பெயரில் உருவாகி இருக்கும் கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. வரும் தேர்தலில் என்.டி.ஏ.வுக்கு தமிழகம் தோல்வி என்ற பதிலடியை நிச்சயம் தரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.