வருகிற 5-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் நாளான 20-ம் தேதி கவர்னர் ஆர்.என். ரவி உரை நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு கடந்த 24-ம் தேதி பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளி வைக்கப்பட்டன.
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை வரும் 13 அல்லது 14-ம் தேதியன்று தாக்கல் செய்யலாமா என அரசு ஆலோசித்து வருகிறது. இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் வரும் 5-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.