தமிழகம் மற்றும் புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த கட்டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 22-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி வருகிறார். வருகிற 28-ம் தேதி (சனிக்கிழமை) அவர் மதுரையில் பிரச்சாரம் செய்கிறார். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தை மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடல், வலையல்குளம், உத்தல்குடி ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். போலீஸ் அனுமதி வழங்கும் இடத்தில் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாட்டில் பிரசாரத்துக்கு வருகிறார். சேலம் விமான நிலையம் அருகே உள்ள திடலில் நடக்கும் கூட்டத்தில் அவர் பேசுகிறார். சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை உடனே தொடங்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள புதுவை மாநிலத்துக்கும் பிரதமர் பிரதமர் மோடி செல்கிறார். வருகிற 21-ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 14-ம் தேதி புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் அவர் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வழிபடுகிறார். காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார் என கூறப்படுகிறது.