புதுப்பிக்கப்பட்ட கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை சென்னை கலைவாணா் அரங்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார்.
என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலை ஜி.என். செட்டி சாலை - திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-ல் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள கலைவாணரின் உருவச்சிலையை கலைவாணா் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்கும்படி கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை வைத்தனா். இதை ஏற்று, சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட உருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, கலைவாணரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன், சுவாமிநாதன், அன்பரசன், நடிகர் நாசர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.